Wednesday, September 15, 2010

Vijay Fans Letter to Actor Vijay, Die Hard Vijay Fans

Wednesday, September 15, 2010

actor vijay fans club, vijay fans letter to vijay, neeya naana vijay tv program 29 Aug 2010, vijay fans association, vijay fans network, vijay fans club, Tamil hero Vijay's fans slams Vijay TV channel, Vijay TV Neeya Naana 29 Aug 2010 Show





விஜய்க்கு ரசிகனின் பகிரங்கக் கடிதம்







அன்புள்ள விஜய் அவர்களுக்கு,




வணக்கம்! உங்கள் படங்களை பார்த்து விசிலடித்து நேரத்தை வீணடிக்கும் சராசரி ரசிகனின் கடிதம் இது. உங்களை ரொம்பப் பிடிக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.




உலகத் தரத்திற்கு தமிழ் சினிமா எட்டு வைத்து முன்னேறி கொண்டிருக்கும் காலகட்டத்தில், 'அதெப்படி முன்னேறலாம்' என்று வேட்டு வைக்கும் உங்கள் படங்களைப் பற்றி என்னவென்று சொல்ல...? கடந்த ஐந்தாண்டுகளில் அதே கதை, அதே காட்சி அமைப்புகள், அதே பஞ்ச் டயலாக்குகள் என்று உங்கள் ரசிகர்களை நீங்கள் பஞ்சர் ஆக்கியதுதான் மிச்சம். திருப்பாசி, சிவகாசி, குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா....இந்தப் படங்களுக்கிடையிலான ஆறு வித்தியாசங்களை (பாடல்கள், நட்சத்திரங்கள், இயக்குனர்கள் நீங்கி) உங்கள் மீது வெறியாய்த் திரியும் ரசிகன் கூட சொல்ல முடியாது.




ஒரே மாதரியான படங்களைப் பார்த்து பார்த்து, உங்கள் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் சலித்து விட்டது. 'நான் வித்தியசமாய் நடித்தால் மக்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள்' என்று சப்பைக் கட்டு கட்ட 'அழகிய தமிழ் மகனை' உதாரணமாய் காட்டுகீறீர்கள்! அழகிய தமிழ் மகன் தோற்றது நீங்கள் வித்தியாசமாய் (?) நடித்ததற்காய் அல்ல....மோசமான திரைக்கதையால்!




சந்திரமுகி திரைப்படம் வெளிவரும் முன்பு, ரஜினிக்கு அடுத்த வசூல் மன்னன் நீங்கள் தான் என்று சில புள்ளி விவரங்கள் சொன்னது. ஒரு ஆங்கில தொலைக்காட்சியோ, ரஜினியை விட உங்கள் புகழ் அதிகம் என்று சொன்னது. குதூகளித்தீர்கள்...! ரஜினியை முந்தப் போகிறோம் என்று கனவு கண்டீர்கள். இன்று உங்களின் உண்மை நிலை என்ன? அந்தோ பரிதாபம்...! வரிசையாய் உங்கள் படங்கள் சரிவையே சந்தித்தன... ஓடாத படத்திற்கு நூறு நாள் போஸ்டர் ஒட்டும் நேரத்தில், ஒருமுறையேனும் என் படம் ஏன் ஓடவில்லை என்று யோசித்ததுண்டா? இத்தனை முறை சறுக்கி விழுந்தும் பாடம் கற்க மாட்டேன் என்றால், மக்களின் தீர்ப்புக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பு தான் என்ன?




இதே கருத்தை முன்வைத்து, உங்கள் நலனில் அக்கறை கொண்ட ஒருவர், 'நீயா நானவில்' ஒரு கருத்தைச் சொல்ல அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சி அதற்கு மன்னிப்பும் கேட்டது. இதற்கு முன்பு இதே விஜய் தொலைக்காட்சியில் வெளிவரும் 'லொள்ளு சபா' என்ற நிகழ்ச்சியில் உங்கள் 'போக்கிரி' திரைப்படத்தை 'பேக்கரி' என்று கிண்டலடித்த போது, உங்கள் தரப்பில் அது கடுமையாய் கண்டிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சி ரஜினியயும், கமலையும், விஜயகாந்தையும் அடிக்காத கிண்டலா? இவர்கள் யாருமே எழுப்பாத கண்டனக் குரலை நீங்கள் மட்டும் எழுப்பியதேன்? இதுவாவது பரவாயில்லை....ஒரு படைப்பாளியின் கிண்டல் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீயா நானாவில் வெளிப்பட்டதோ மக்கள் கருத்து. அதற்கு நீங்கள் கண்டனக் குரல் எழுப்பியது எந்த வகையில் நியாயம்? கருத்துச் சுதந்திரம் எங்கே போனது? கலைஞர் மீதும், ஜெயலலிதா மீதும் வைக்கப்படாத விமர்சனங்களா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லையெனில் பொது வாழ்க்கைக்கு ஏன் வந்தீர்கள்?




தோல்வியை ஏற்றுக் கொள்ள உங்களைத் தடுப்பது எது? 'வில்லு' படத்தின் தோல்வி குறித்து ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கும், அதற்கு பதிலாய் ஒலித்த உங்களின் காட்டுக் கத்தலும், பத்திரிக்கைகளில் வேண்டுமெனில் வெளிவராமல் இருந்திருக்கலாம் (உங்களின் வேண்டுகோளின் பேரில்). ஆனால் யூ டியூப்பில் வந்து விட்டதே....? உண்மையை எத்தனை நாட்களுக்கு மறைக்க முடியும்? நாங்கள் கண்டு வேதனை கொண்டோம். தோல்வியை ஒப்புக் கொள்ளாதவன் எப்படி சரித்திர நாயகனாய் மிளிர முடியும்?





ஒன்று தெரியுமா உங்களுக்கு....? இணையத் தளங்களிலும், எஸ்.எம்.எஸ்.களிலும், அதிகம் கிண்டலடிக்கப்படும் நட்சத்திரம் நீங்கள் தான். ஒரு பிரபலமான எஸ்.எம்.எஸ்.



ஒருவன்: கமலுக்கும், விஜய்க்கும் என்ன வித்தியாசம்? சொல்லு பார்க்கலாம்....



இன்னொருவன்: கமல் ஒரு படத்தில் 10 வேடங்களில் நடிப்பார்! விஜய் 10 படங்களில் ஒரு வேடத்தில் நடிப்பார்!




இது நகைச்சுவைக்காய் என்றாலும், உண்மை தானே! உங்களை யாரும் விருதுப் படங்களில் நடிக்கச் சொல்லவில்லை. மசாலாப் படங்களிலேயே தொடர்ந்து நடியுங்கள். ஆனால், அதில் என்ன புதுமை இருக்கிறது என்று தேடுங்கள்...!




தமிழ் நாட்டில் வேண்டுமெனில் உங்கள் படங்களுக்கு பிரமாதமான ஓப்பனிங் இருக்கலாம். ஆனால், இப்போதெல்லாம் வெளி நாடுகளில் உங்கள் படங்களுக்கு கூட்டம் வருவதே இல்லை. இது தான் யதார்த்தம். விழித்தெழுங்கள்! உங்களின் மிகப் பெரிய பலம், அடுத்தடுத்த தோல்விகளில் தத்தளித்தாலும், தமிழகத்தில் உங்கள் ரசிகர் பலம் இன்னும் கலையாமல் இருப்பது தான்! வெளி நாடுகளில் நிகழ்ந்தது, தமிழ் நாட்டில் நடக்காமல் இருக்க...




தடம் மாறுங்கள்! நிரந்தரமாய் தடம் பதிப்பீர்கள்!




அன்போடு...



உங்கள் வெற்றிக்காய் காத்திருக்கும் அன்பு ரசிகன்!

No comments:

Post a Comment