நாகப்பட்டினம்: தமிழக மீனவர்களை தாக்கி வரும், இலங்கை ராணுவத்திற்கு அடங்கி விட்டோம் என நினைக்காதீர்கள், மீனவர்கள் உயிரோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று
நாகையில் நடிகர் விஜய் பேசினார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, "விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் நாகையில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.விஜய் தந்தையும் "விஜய் மக்கள் இயக்கத்தின்' பொதுச்செயலருமான இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர்கள் ஜெயக்குமார், பாண்டியன் ஆகியோர் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியும், 10 மீனவர்கள் குடும்பத்தினருக்கு மீன் பிடி உபகரணங்கள் மற்றும் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கியும் நடிகர் விஜய் பேசியதாவது: மீனவர்களுக்கு கடல் தான் தாய். கடல் மாதாவை மீறி மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குகிறது. இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புரியவில்லை. இத்தகைய தாக்குதலை தாங்க முடியாமல் வேதனை கலந்த உணர்வோடு வந்திருக்கிறேன். இதற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்.
இங்கு நாம் அனைவரும் முக்கிய குறிக்கோளுடன் கூடியுள்ளோம். மீனவர்களை தாக்கி, கொலை செய்யும் இலங்கை ராணுவத்தினர் மனிதர்களா அல்லது அரக்கர்களா என்று தெரியவில்லை. தமிழர்கள் கோழைகள் இல்லை. இலங்கை ராணுவத்திற்கு அடங்கி விட்டோம் என நினைக்காதீர்கள். மீனவர்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மீனவர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் என்மீது விழும் அடியாக உணர்கிறேன். நாம் ஏதோ வந்தோம் கூடினோம்,சென்றோம் என்று இருக்கக் கூடாது. நமது எதிர்ப்பை பதிவு செய்ய இன்றே அனைவரும் பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் லட்சக்கணக்கான தந்திகளை அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் தந்திகள் நாளை பிரதமர், முதல்வர் வீட்டு கதவை தட்ட வேண்டும். பிரபாகரன் தாயார் பார்வதி அம்மையார், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட ஜெயக்குமார், பாண்டியன் ஆகியோருக்காக நாம் அனைவரும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம். இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.
ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு: பொதுமக்கள் முகம் சுளிப்பு: நாகையில் நடிகர் விஜய் பொதுக்கூட்டத்திற்காக, பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, நாகையில் "விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான விஜய் ரசிகர்கள்,நேற்று காலையில் இருந்து வாகனங்களில் வரத் துவங்கினர். இதில் அனைவருமே 15 வயதில் இருந்து 25 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தனர். பஸ்கள்,வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோவில் வந்த ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் கூச்சல் போட்டுக் கொண்டு சாலைகளில் ஆர்ப்பரித்து, பொதுமக்களை கலங்கடித்து சென்றனர். விஜய் ரசிகர்களின் ஆர்வ மிகுதிக்கு ரோட்டில் நடந்து சென்ற பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவியர்களும் தப்பவில்லை. ரசிகர்களின் கூச்சலால் பெண்களும், மாணவியர்களும் அலறியடித்து ஓடினர். இச்செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
No comments:
Post a Comment